திங்கள், ஆகஸ்ட் 30, 2010

என்னுடைய முதல் சிறுகதை...

மழைத் தூறலை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். மழையை ரசிப்பது அவனுக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரக் கூடியது தான், ஆனால் இன்றோ அவன் மனதில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் யோசனைகள் அவனை இக்காட்சியிலிருந்து விலக்கி தனியேவிட்டிருந்தது. அவனின் யோசனைக்கு காரணம் இதுதான். அவன் கட்டிக்கொண்டிருக்கும் அம்மன் கோவலின் பணிகள் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கின்றன, உட்பிரகாரம் முடித்து விட்டாகிவிட்டது, இன்னமும் சாமி சிலைகள், மேல் கோபுரம், மற்றும் சுற்றுப்புற சுவர்கள் என்று பல வேலைகள் செய்யவேண்டியுள்ளது. அவன் கையிலிருந்த பணம், வீட்டிலிருந்த நகைகள் மற்றும் அக்கம் பக்கத்தில் நண்பர்களிடம் வாங்கிய நன்கொடைகள், சொந்தக்காரர்கள் மற்றும் பங்காளிகளிடம் வாங்கிய நன்கொடைகள் அனைத்தும் சேர்த்தால் கூட கோவில் பணிகளுக்கு பற்றாத சூழ்நிலை. இந்நிலையில் அவனின் பால்ய சிநேகிதன் சந்திரனின் மகளுக்கு பொறியியல் கல்லூரியில் சேர்க்க பணம் வேண்டும் என்று நடையாய் நடந்து கொண்டிருக்கிறான். குமரனும், சந்திரனும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். குமரன் மேற்படிப்பை முடித்து விட்டு சிறிது வருடங்கள் துபாயில் இருந்து சம்பாரித்து கொண்டு இங்கு செட்டிலாகிவிட்டான். சந்திரன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படிப்பையும் மேற்கொண்டு தொடர முடியாமல், கிடைத்த வேலைகளுக்குச் சென்று, ஏதோ வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றான். சந்திரன் எப்படியாவது தன்னுடைய பெண்னை பொறியியல் பட்டதாரியாக்கிவிடலாம் என்று முனைப்புடன் இருக்கிறான். ஆனால் என்ன செய்ய, போதிய பணம் இல்லையே? இப்போதெல்லாம் வங்கியில் கல்விக் கிடைப்பது எளிது என்று சொன்னாலும், அதை வாங்குவது அவ்வளவு எளிதில்லை என்பதை சந்திரன் நன்கு உணர்ந்திருந்தான். சந்திரனுக்கு அவ்வளவு பெரிய தொகையைக் கட்டி மகளைப் படிக்க வைக்கும் அளவிற்கு வசதியில்லையென்றாலும் அவளை எப்படியாவது நன்றாக படிக்க வைத்துவிடவேண்டும் என்ற வைராக்கியத்தோடுதான் இருந்தான். காரணம், தான் படிக்காததால் பட்ட கஷ்டங்களை தன்னுடைய மகளும் அனுபவிக்க விரும்பவில்லை. தானும் படிக்காமல் தன்னுடைய மனைவியும் படிக்காததால் சமூகத்தில் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுதான் காரணம். என்னால் இப்போதைக்கு எந்த உதவியும் செய்ய முடியாது, கோவில் திருப்பணிகளுக்கு வேறு பணம் பத்தாது இன்றும் 10 நாள் வேலைக்கு மட்டும் தான் பணம் உள்ளது, மீதிப் பணத்தை இனிமேல் தான் வசூல் செய்ய வேண்டும், அதற்கே எனக்கு நேரமில்லை, பிறகு பார்க்கிறேன், என்று சொல்லி அவர்களைத் தற்போது திருப்பி அனுப்பிவிட்டுத் தான் வந்திருக்கிறான். இது தான் குமரனின் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ண அலைகள். கோவில் திருப்பணிகளை எவ்விதம் துரிதமாக முடிப்பது என்பது பற்றியே அவனுக்கு எண்ணங்கள் உலவிக் கொண்டிருந்தது.

கோவில் காரியம் விரைவில் நடக்க வேண்டும், தன் நண்பனின் அவ்வாறு பேசிவிட்டோமே என்ற குற்ற உணர்வுக்கும் இடையே சிக்கி திணறிக் கொண்டிருந்தான். எல்லாவற்றிற்குமே சீக்கிரமே வழி பிறக்கும் என்று எண்ணிக்கொண்டு எழுந்த வேலையில், காலாற சற்று தூரம் நடந்து வரலாம் என்று தோன்றியது, அப்படியே அவனுடைய பால்ய சிநேகிதனைப் பார்த்து தன் கோவில் திருப்பணிக்கு ஏதாவது நன்கொடை கேட்டுக் கொள்ளலாம் என்று தோன்றவே, இரசீது புத்தகங்களுடன் ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சிறது தூரம் நடந்திருப்பான் சற்றே தொலைவில் தெருவுக்குள் ஏதோ சலசலப்பு கேட்கவே சற்று உற்று நோக்கினான், சரி அருகில் சென்று பார்கலாம் என்று சிறிது தூரம் நடக்கையில், முரடனைப்போலிருந்த ஒருவன் ஒரு பெண்ணை அவசர அவசரமாக ஒரு ஆட்டோவில் இரண்டு கையாலும் தூக்கி உள்ளே இருந்தவர்களிடம் கொடுத்தான், பின்புறமாக நின்று கொண்டு ஒரு பெண் தலையிலடித்துக் கொண்டு அழுவதும், அவள் வீட்டுக்குள் கையை நீட்டி, கையாலாகவதன் உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி பிள்ளை, பெத்த ஒன்னயும் இப்படி படுக்க வச்சுருக்கியேடா, நீயெல்லாம் உருப்புடுவியா, என்று ஏகவசனத்தில் அடுக்கிக் கொண்டிருந்தாள், இதையெல்லாம் பார்க்கும் போது அங்கே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்தது. என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சென்று விசாரித்ததில், இப்போது ஆட்டோவில் கொண்டும் செல்லும் பிள்ளைக்கு வயது 17 தான் ஆகிறதாம். +2வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாம், அப்பெண்னுக்கு மருத்துவப்படிப்பில் சேர ஆசையாம், ஆனால் அவனுடைய அப்பன் சரியான குடிகாரன், எப்போதாவது தான் வேலைக்குச் செல்வானாம், அப்படியே வேலைக்குச் சென்றால் திரும்பும் போது சண்டை சச்சரவுகளுடன்தான் திரும்புவானாம், மீதி நாட்களில் வீட்டிலேயே இருந்து கொண்டு, அவன் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டும், அதை யாராவது கேள்வி கேட்டால் அவர்களையும் நா கூசாமல் அசிங்கமாகப் பேசுவதும் வாடிக்கையாகிவிட்ட விசயம். அதனால் அவன் இருக்கும் பக்கம் கூட அந்த ஏரியாவாசிகளின் நடமாட்டம் குறைவுதான். அப்படியிருக்க அந்த குடிகார தகப்பன் தன் மகளை மேற்கொண்டு படிக்க வேண்டாம், நான் சொல்கிற ஆளைக் கல்யாணம் செய்து கொண்டு கிளம்பற வழியப்பாரு, இல்லையென்றால் உன்னை நானே கொன்றுவிடுவேன் என மிரட்டி அப்பெண்னை அடித்து உதைத்தானாம், அதனால் அப்பெண் இன்று காலையில் விஷம் குடித்துவிட்டாளாம், என அங்கிருந்த பெருசு ஒன்று அத்தனை கதைகளையும் சொல்லிமுடித்தது, கேட்கவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது, இது மாதிரியான விசயங்களை பேப்பரில் படித்திருக்கிறேன் இன்று தான் நேரில் கண்ணெதிரே பார்க்கும் சந்தர்ப்பம், ஏற்கனவே மனதில் உள்ளவற்றை தீர்க்க முடியாமல் அலையும் எனக்கு, மேலும் இன்னொன்றா? ஆண்டவா என்ன மனிதர்களடா! என எண்ணத் தோன்றியது. சரி திரும்பி வந்தவழியே நடந்து கொண்டிருந்தபோது, அப்போது சென்ற ஆட்டோ திரும்பிவருவதைக் கண்ணுற்று நின்றேன், ஆட்டோவில் இருந்து இறங்கியவன் கண்ணைத் துடைப்பதும், அங்கு நின்றிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, அவள் தலையில் பெரிதாய் அடித்துக் கொண்டு அழுது, தரையில் விழுந்து உருண்டதைக் கண்டதுமே, எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அவ்விடத்திற்கு மீண்டும் விரைந்தேன். பாவம் கொண்டு செல்லும் வழியிலேயே அப்பெண் மரணத்தை தழுவியிருக்கிறாள், தனியார் மருத்துவமனையில் உறுதிசெய்து கொண்டு, உடனே வீட்டிற்கு திரும்ப கொண்டுவந்துவிட்டனர்.

இப்போ அழுது என்ன பிரயோசனம், அந்த பிள்ளை படிக்கிறேன், பெரிய டாக்டரா வரனும்னு சொன்னப்ப கேட்கலையே, இப்ப ஏன்டா அழறே! போயா போயி எங்களுக்கும் விசத்தை கொண்டு வா! இப்படி உங்கிட்ட தெனமும் செத்து செத்து பொழைக்கறதுக்கு ஒரேடியா எம்மவ கூடயே நானும் போயர்றேன், என்று அங்கு நின்று அழுதுகொண்டிருந்த தன் குடிகாரக் கணவனைக் கேட்டுக்கொண்டிருந்தாள் மகளை இழந்த தாய், உண்மைதானே! இருக்கும் வரை நாம் எதையும் நினைத்துப் பார்பதில்லை, அது நம்மை விட்டு அகன்றவுடன் ஒரு நிர்வாணம் நம்மை சூழ்ந்துகொள்கிறது. வாழும் காலத்தில் மதிக்கப்படுவது, போற்றுதலுக்குரியது. இப்படி கண்முன்னே இருக்கும் மனிதர்களை உதாசீனப்படுத்திவிட்டு, நாம் மட்டும் நிம்மதியாக இருக்க வேண்டும், நம்முடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பாவச் செயல்! படிப்பைத் தொடர முடியாமல் உயிரை விட்ட அப்பெண்ணை நினைத்து வருந்தினேன்.

குமரனுக்கு இப்போது மனதில் எண்ண அலைகள் இல்லை, மனத்தாங்கல்கள் இல்லை, எங்கேயோ பெய்த மழையின் காற்று வீசத் தொடங்கியதைக் உணர்ந்தான், சற்று நேரத்திற்கு முன்பு வரையிலும் அவன் மழையில் தான் குடை பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருக்கின்றான், ஆனாலும் அந்த உணர்வுகளே இல்லாமல். இப்போது மழைக்காற்று அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவது போலிருந்தது. சே! எவ்வளவு சுயநலமாய் இருக்க பார்த்திருக்கிறோம். தன் நன்பன் உதவியென்று வந்து அதுவும் தன் மகள் படிப்பதற்காக பணம் கேட்டதற்கு மறுத்திருக்கிறோமே, என்ற எண்ணம், அவன் மனதில் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. உடனே வீடு திரும்பி தன் நண்பனை அழைத்து அவன் மகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என உறுதியுடன் நடந்தான்.

இப்போது அவன் மனதில் எவ்வித குழப்பமும் இல்லை. மழைவிட்ட பின் தோன்றும் தெளிவான வானத்தைப் போலிருந்தது. அவன் மனதிலிருந்த பாரம் குறைந்து லேசாகியிருந்தது. தான் கட்டவிருக்கும் கோவிலின் அம்மன் அவன் மனதில் வந்து காட்சியளித்துவிட்டுப் போனாள். மாதா, பிதா, குரு, பிறகுதான் தெய்வம் என்று உணர்த்துவதைப் போலிருந்தது. கல்விக் கூடங்களே, இறைவனின் ஆலயங்கள். கல்வி கற்போருக்குச் செய்யும் உதவி, ஆண்டவனுக்கு நேரடியாகச் செய்யும் சேவையைப் போன்றது. தான் செய்யும் இக்காரியத்தால் கோவில் பணிகள் சிறிது தாமதம் ஆகத்தான் செய்யும், ஆனால் எப்படியும் சிறப்பாக நடந்தேறிவிடும் என்று நம்பிக்கையுடன் நடந்தான்.


1 கருத்து:

Manigandan Chinnasamy சொன்னது…

Very good theme ... Giving priority to education than worship. Tamil spelling mistakes on very few places can be avoided .! I liked this story very much